கைதான தம்பதி புதியதலைமுறை
தமிழ்நாடு

70 வயது மூதாட்டியை கொன்றுவிட்டு 5 சவரன் தங்க நகையை திருடிய தம்பதி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

வேடசந்தூர் அருகே மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, 5 பவுன் நகையை திருடிய கணவன் - மனைவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

யுவபுருஷ்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள், வயது 70. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஜெகநாதன் - கௌசல்யா என்ற தம்பதியினர் மாரியம்மாளின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் மற்றும் கால்நடைகளை பராமரித்து, அவரது வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு மாரியம்மாள் வீட்டின் உள்ளே டீவி பார்த்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென வீட்டிற்குள் வந்த ஜெகநாதன் - கௌசல்யா தம்பதியினர், மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும், தங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரியம்மாளின் மகன் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று, காரில் வந்த மர்ம நபர்கள் மாரியம்மாளை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக நாடகமாடியுள்ளனர்.

உயிரிழந்தவர்

இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் கௌசல்யா - ஜெகநாதன் தம்பதியை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். காவல்துறையினர் தங்கள் பாணியில் அவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஜெகநாதன் - கௌசல்யா தம்பதிகள், தங்களது இரண்டு வயது மற்றும் ஐந்து மாத மகன்களுடன் மாரியம்மாளின் வீட்டில் தங்கி இருந்து தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். முதலில் நன்றாக கவனித்துக் கொண்ட மாரியம்மாள், நாட்கள் செல்ல செல்ல ஜெகநாதன் - கௌசல்யா தம்பதியை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் மாரியம்மாளை கொன்றுவிட்டு தங்கச்சங்கிலியை திருடி செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி நேற்று இரவு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தங்கச் சங்கிலி திருடி சென்று தோட்டத்தில் புதைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு ஜெகநாதன் - கௌசல்யா இருவரையும் காவல்துறையினர் கைது செய்து வேடசந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.