’கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி கட்டாயம்’ என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ, தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டாலோ 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 2 முறைக்கு மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் நாள்தோறும் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், அண்ணாநகர் மண்டலத்தில் 1 லட்சம் ரூபாயும் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.