தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: வங்கியில் 10 லட்சம் கடன் பெற்று நிவாரணம் வழங்கும் ஊராட்சி உறுப்பினர்

கொரோனா கால மகத்துவர்: வங்கியில் 10 லட்சம் கடன் பெற்று நிவாரணம் வழங்கும் ஊராட்சி உறுப்பினர்

kaleelrahman

பூவிருந்தவல்லி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, வங்கியில் 10 லட்சம் கடன் பெற்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி, சேன்ட்ரோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, செம்பரம்பாக்கம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினரான இவர், தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதற்காக 10 லட்சம் ரூபாயை வங்கியில் கடனாக பெற்றுள்ளார்.

அந்த பணத்தைக் கொண்டு, ஊனமுற்றோர், நலிவடைந்தோர், விதவைகள் என ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, சேமியா, சோப்பு, மிளகாய் தூள், மஞ்சள், காய்கறி என ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணம் பொருட்களுடம் கிரிமி நாசினி, முகக்கவசத்தை செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தனது மனைவி பத்மாவதியுடன் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.சாதாரண வார்டு உறுப்பினர் ஒருவர் வங்கியில் கடன் பெற்று உதவி செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜாமணி கூறுகையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டதை கண் கூட பார்த்ததாகவும் இதனால் தன்னால் முயன்றதை செய்ய விரும்பி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார். இதற்கு தன் குடும்பத்தினரும் தனக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து தன்னால் முடிந்ததை செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

- ஆவடி நவீன்