ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த அந்த நபரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓமனிலிருந்து தமிழகம் திரும்பிய 45 வயது நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளை சமாளிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் தன் டவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதித்த நபர் கடந்த 5 நாட்களுக்கு முன் தங்கள் மருத்துவமனைக்கு காய்ச்சலுடன் வந்ததாகவும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளாகவும் ராஜிவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தாக்கியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளார். ஓமனிலிருந்து வந்த ஒரு தமிழர் உட்பட மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவ குமார் தெரிவித்தார். ஈரான் சென்று விட்டு தாயகம் திரும்பிய லடாக்கை சேர்ந்த இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக சஞ்சீவ குமார் கூறினார்.