தமிழ்நாடு

ஆவடி: செங்கல் சூளையில் பணிபுரிந்தவருக்கு கொரோனா... தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்..!

ஆவடி: செங்கல் சூளையில் பணிபுரிந்தவருக்கு கொரோனா... தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்..!

webteam

ஆவடி அருகே செங்கல் சூளையில் பணிபுரியும் வட மாநில இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் உடன் பணிபுரியும் 52 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆவடி அருகே பாண்டேஸ்வரம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது இந்த செங்கல் சூலை சட்டவிரோதமாக செயல்பட்டதாக தெரிகிறது. இங்கு வேலைப்பார்த்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞருக்கு கடந்த 4 நாட்களாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக இவருடன் பணிபுரிந்தவர் உட்பட செங்கல் சூளையில் இருந்த 52 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அம்பத்தூரில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.