பெயிட்டி புயல் தமிழகத்துக்கு மழை தராதபோதிலும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இரண்டு நாட்களாக ஊட்டியாக்கி மாற்றி இருக்கிறது.
அதிகாலை 1.30 நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் பெயிட்டி புயல் நிலை கொண்டிருக்கிறது. பெயிட்டி புயல் தீவிரப் புயலாக மாறியுள்ள நிலையில், இன்று பிற்பகல் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெயிட்டி புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள போதிலும், தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனிடையே நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லென்ற காற்று தொடர்ந்து வீசி, பகலிலும் மார்கழி குளிரை அள்ளித்தந்து சென்னைக்கு புதிதான ஒரு பருவநிலையை தந்திருக்கிறது பெயிட்டி. ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் நிலவக்கூடிய குளிர்ந்த சூழல் நிலவுவதால், சென்னையில் பகலிலும் பலரை ஜெர்க்கின், மங்க்கி குல்லாவை அணிந்தபடி செல்ல வைத்திருக்கிறது பெயிட்டி புயல். ஆஹா. சென்னையில் ஒரு ஊட்டியா...? என்றபடி இந்த குளிர்ந்த காற்று வீசும் சூழலை பலரும் வியந்து ரசித்து அனுபவிக்கின்றனர். 2 நாட்களாக ஏசி, மின்விசிறியின் தேவையின்றி மின்சார சிக்கனத்தையும் ஏற்படுத்தியிருக்கும் பெயிட்டி புயல் இதன் மூலம் மனங்களையும் குளிர்ச்சிபடுத்தியுள்ளது.