தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி: மழைநீரால் நிரம்பிய சுரங்கபாதைகள்

தொடர் மழை எதிரொலி: மழைநீரால் நிரம்பிய சுரங்கபாதைகள்

webteam

இரவு முழுவதும் பெய்த கனமழையால், சென்னையில் மக்கள் பயன்படுத்தும் பல சுரங்கபாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 

சென்னை கீழ்பாக்கம் பகுதியிலுள்ள கெங்குரெட்டி சுரங்கப் பாதையில் நேற்று இரவு தொடங்கி காலை வரை பெய்த கனமழையால் சுரங்கப் பாதை நீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இங்கு வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதே போல் மாதவரம் ரவுண்டானா பகுதியில் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன. 

இதுகுறித்து ஆய்வு செய்த  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னையில்  சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் 60 மோட்டார் பம்புகள் கொண்டு உடனடியாக வெளியேற்றபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.