சுகாதாரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சரவணபவன் மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ,1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அண்ணாசாலையில் உள்ள சரவணபவன் உணவகத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கறிஞரான சாமி என்பவர் உணவு உட்கொண்டுள்ளார். ஆனால் அவர் உட்கொண்ட உணவில் முடி கிடந்ததாகவும், இது குறித்து மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதும் வேறு உணவு மாற்றிக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும் கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமி வழக்கு தொடர்ந்தார்.
அதில்சுகாதாரமற்ற உணவை வழங்கிய சரவணபவன் உணவகம் இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தான் மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை விவரங்களையும அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சாமிக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சரவணபவன் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.