விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் முகநூல்
தமிழ்நாடு

”விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையட்டும்..அங்கேயாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும்”- நடிகர் தியாகு இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தேமுதிக தலைவரும் நிறுவனரான விஜயகாந்த் அவர்களுக்கு இன்று காலை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அதிகார பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலகினர் என்று பல்வேறு தரப்பினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நண்பர் தியாகு, நடிகர் ஆனந்த ராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது இரங்கலை பதிவு செய்துவருகின்றனர்.

நண்பர் தியாகு:

”அவரை போன்ற நல்ல மனிதர் கிடையாது. எல்லோரையும் வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பவர். என் மகள் மருத்துவராக இருப்பதால் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி காலையிலேயே என்னை வந்து சேர்ந்தது. ஆனால் அதை நான் நம்பவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் அங்கேயாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும்” என்று கண்ணீர் மல்க தனது இரங்கலை தெரிவித்தார்.

நடிகை குஷ்பு சுந்தர்:

”ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். தங்க இதயம் கொண்ட மனிதர் அவர். மிகுந்த தகுதியுள்ள ஒரு மனிதன். எங்கள் அன்புக்குரிய கேப்டன், எங்கள் விஜயகாந்த். ஐயா, நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று பதிவுசெய்துள்ளார் நடிகை குஷ்பு.

ஆனந்த ராஜ்:

“மிகவும் வேதனை நிறைந்த நாள் இன்று. வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்திருப்பினும் என் குடும்பத்திலேயே ஒரு மனிதரை இறந்துவிட்டது போன்ற பெரும் வலி எனக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. அந்த வலி என்னவென்று என்னால் சொல்ல இயலவில்லை. ஏற்று கொள்ள இயலாத இழப்பு இது. 82 ல் இருந்து நான் அவருடன் ஒரு திரைப்பட கல்லூரி மாணவராக பயணித்து வருகிறேன். திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கென்று தனி அங்கீகாரம் கொடுத்த மனிதர்.

எனவே இவரது மறைவை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. நேற்று இரவுதான் நான் என் நண்பர் ஒருவரிடத்தில் பேசி கொண்டு இருந்தேன். அப்போது என் மேசையில் ஒரு 100 ரூபாய் தால் இருக்கும்.அதில் விஜயகாந்தின் அவர்களின் பெயரை எழுதி வைத்திருப்பேன்.

புத்தாண்டு நாட்களின் பகுதி நேரம் படப்பிடிப்பு நடத்தி விட்டு ஒரு மரியாதைக்காக எங்கள் அனைவருக்கும் ஒரு 100 ரூபாய் தால் தருவார்.இப்படி என்னிடத்தில் அவர் கொடுத்த நிறைய நோட்டுகள் இருக்கிறது. இன்று நான் அனைவருக்கும் பணம் கொடுத்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அவர் கற்று கொடுத்த செயல் தான் அது.

மேலும் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து நிறைய படங்களில் பயணித்து இருக்கிறேன். அவருக்கு நான் நகம் வெட்டிவிடுவேன். எனவே எதை சொல்வது என்று தெரியவில்லை. .ஒரு உடன் பிறந்த சகோதராக அவரை நான் நினைத்து இருந்தேன்.

நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர். இப்படி அதற்கு அப்பாற்பட்டு அவரது நினைவுகளை சுமக்கும் திரைத்துறையை சார்ந்த நிறைய நபர்களும் இருக்கிறார்கள்.திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு என்று தனி அங்கீகாரம் அளித்தவர் அவர். மேலும் நான் திரைப்பட கல்லூரி மாணவராக இருந்த அதை பற்றி என்னிடம் நிறைய கேட்டு தெரிந்திருக்கிறார்.

அதற்கான மரியாதையையும் வழங்கியுள்ளார்.நான் என் குடும்பத்துடன் 20 வருடம் தான் வாழ்ந்திருப்பேன்.மீதியுள்ள அதிக காலங்களில் இவரோடு நான் வாழ்ந்ததுதான் அதிகம். இப்படி அவருடன் சொல்லமுடியாத நிறைய நினைவுகளும் நிறைந்துள்ளன.” என்று மீளாத துயரில் தனது இரங்கலை பதிவு செய்தார் ஆனந்த ராஜ்..