தமிழ்நாடு

கொள்ளை லாபமடையும் தனியார் பால் நிறுவனங்களை முறைப்படுத்த ஆணையம் அமைக்கவும்: சீமான்

கொள்ளை லாபமடையும் தனியார் பால் நிறுவனங்களை முறைப்படுத்த ஆணையம் அமைக்கவும்: சீமான்

Veeramani

கொள்ளை லாபமடையும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை முறைப்படுத்த ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கதென்றாலும், தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு முறையாக நிர்ணயிக்கத் தவறியது மிகப்பெரிய குளறுபடிகளுக்கும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்ளை லாபமடைவதற்கும் வழிகோலியுள்ளது ஏமாற்றத்தைத் தருகிறது.

விவசாயிகளும், வீடுகளிலேயே கறவைமாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரும் உற்பத்தி செய்யும் பாலை, அரசு நிறுவனமான ஆவின் மற்றும் இதரத் தனியார் பால் விற்பனை நிறுவனங்களும் கொள்முதல் செய்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்தப் பால் உற்பத்தியில் 16 விழுக்காடு மட்டுமே தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றது. மீதமுள்ள 84 விழுக்காடு அளவுக்கான பாலைத் தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. இதனால், தமிழக அரசு நிர்ணயிக்கும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையின் பயன்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்று சேர்வதில்லை என்பதே புறச்சூழலாகும்.

தற்போதைய கொரோனா ஊரடங்குக்காலத்தில் தீவன விலை உட்பட மாடுகளுக்கான பராமரிப்புச்செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும், ஊரடங்கைக் காரணமாகக் காட்டி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொழுப்பு அடிப்படையில் ஆவின் நிறுவனத்தைவிடக் குறைவாக சராசரியாக ஒரு லிட்டருக்கு ரூபாய் 12 வரை குறைத்து கொள்முதல் செய்கின்றன. இதனால், மாடு வளர்க்கும் 20 லட்சம் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அதேநேரத்தில், அந்தப் பாலினை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோரான பொதுமக்களுக்குப் பால் விலையைக் குறைத்து விற்பனை செய்யாது, ஆவின் பாலைவிட லிட்டருக்கு 20 ரூபாய்வரை கூடுதலாக விற்று லாபமடைகின்றன தனியார் நிறுவனங்கள். இதனால்,பொது மக்களான நுகர்வோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதல் விலை, விற்பனை விலையென எப்படிப் பார்த்தாலும் தனியார் பால் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆகவே, தற்போதைய கொரோனா பெருந்தொற்றுப்பாதிப்புக் காலத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பையும், பாலினை வாங்கிப் பயன்படுத்தும் பொதுமக்களின் துயர நிலையினையும் உணர்ந்து, தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலையை அரசு முறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும், தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு இணையாக பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள ஏதுவாக விலை நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும் எனவும், அரசின் உத்தரவை தனியார் பால் நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யப் பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசைக் கோருகிறேன்.

இதன்மூலம், ஒரு சில தனியார் பெருநிறுவனங்களின் முதலாளிகள் பெரும் லாபமடைவதற்காக விவசாயிகளும், பொதுமக்களும் கடும் பாதிக்கப்படும் அவல நிலையைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதையுணர்ந்து, பால் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் முன்வைத்துள்ள இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்