தமிழ்நாடு

கோவை: மயங்கி விழுந்து துடிதுடித்து வந்த கோவை பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை: மயங்கி விழுந்து துடிதுடித்து வந்த கோவை பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

கோவை பெரியதடாகத்தில் வயது மூப்பினால் ஏற்படும் உடல் நலம் பாதிப்புகளால் அவதிப்பட்ட பெண் யானை, சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளது.

கோவை பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அருகே உடல்நலக்குறைவால் தனியார் நிலத்தில் பெண் யானை மயங்கி திடீரென மயங்கி விழுந்தது. அதை மீட்டு, கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதும் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தது.

முன்னதாக நேற்றைய தினம் கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று, உடல்நலக் குறைவால் நடக்க இயலாமல் படுத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து அங்கு சென்றுள்ள வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். 32 முதல் 35 வயதுடைய பெண் யானை, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியிலேயே மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுனர்.

இப்படியான சூழலில்தான் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யானையின் இறப்பு குறித்து வனத்துறையினர் தெரிவித்துள்ள தகவலில், “40 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயது மூப்புக்காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.