தமிழ்நாடு

கோவை: சாலையில் கிடத்தப்படும் கொரோனா நோயாளிகள் - இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவலம்

கோவை: சாலையில் கிடத்தப்படும் கொரோனா நோயாளிகள் - இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவலம்

kaleelrahman

கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தரையில் அமர்த்தப்பட்டு சுமார் ஒருமணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று மட்டும் கோவையில் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ, மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொற்று பாதிப்பு எத்தனை சதவீதம் ஒருவரது நுரையீரலை பாதித்திருக்கிறது என்பதை கண்டறிய சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அவ்வாறு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வரும் வயதானவர்களை சி.டி. ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவர்களின் பரிந்துரை சீட்டை வாங்கிக்கொண்டு ஸ்கேன் மையத்திற்கு செல்லும் வயதானவர்களுக்கு இருக்கைகள் கூட வழங்காமல் மையத்தின் வெளியே தரையில் அமர வைத்து மருத்துவம் பார்க்கப்படுகிறது.

இதில், தொற்று பாதிப்புக்குள்ளான மூதாட்டி ஒருவர், வயோதிகம் காரணமாக தரையில் அமர முடியாமல் சாலையிலேயே சுருண்டு படுத்த காட்சி மனதை ரணமாக்கியது. கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட வழங்கவில்லை என்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் புலம்பித் தவிக்கின்றனர்.