தமிழ்நாடு

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட காவலர் - சக ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல்

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட காவலர் - சக ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல்

சங்கீதா

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலருக்கு, மதுரை மாவட்ட காவல்துறையினர் 2 லட்ச ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆயுதப் படையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சையது அபுதாஹிர் என்ற முதல்நிலைக் காவலருக்கு, சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. இதனால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் காவலரின் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர், 2 லட்சத்து 25 ஆயிரத்து 350 ரூபாயை சேகரித்து, அந்த நிதியினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் காவலர் சையது அபுதாஹிர் குடும்பத்தினரிடம் சிகிச்சைக்காக அளித்தனர்.

காவலர் அபுதாஹிர் சிகிச்சைக்காக, அவருடன் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறை நண்பர்கள் இணைந்து ரூபாய் 2 லட்சத்தை அவருடைய சிறுநீரக சிகிச்சைக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் வழங்கி உள்ளனர். சிகிச்சைக்கான நிதியினை பெற்ற காவலர் அபுதாஹிர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், காவல்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.