முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

விபி சிங் சிலை திறப்பு - “நாம் அவருக்கு காட்டவேண்டிய நன்றி” முதல்வர் பெருமிதம்

“விபி சிங்கிற்கு சிலை வைப்பதன் மூலம் அவரது புகழ் உயர்வதாக பொருள் அல்ல. நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டியுள்ளோம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Angeshwar G

வி.பி.சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் வி.பி. சிங்கின் குடும்பத்தினர், அவரது மனைவி சீதா குமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஏன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் சிலை அமைக்கப்பட வேண்டும்? தமிழகத்திற்கும் அவருக்குமான பந்தம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தால் அதற்கான பதிலாக கிடைப்பது அவர் பிரதமராக இருந்த போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை நினைவு கூறலாம்.

இந்நிலையில் அவற்றை உணர்ந்து, அவரது நினைவுநாளான இன்று, அவருக்கு சென்னையில் சிலை திறக்கப்பட்டுள்ளது. அவ்விழாவில் சிலை திறந்து வைத்தபின்னர் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வி.பி. சிங்கிற்கு உத்தரபிரதேசம் தாய்வீடு. தமிழ்நாடு தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி. சிங் பேச்சு இருக்காது. இன்று நான் வி.பி. சிங்கிற்கு சிலை திறந்ததை விட வேறன்ன பெருமை இருக்கும்.

அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அவரது மனைவி சீதா குமாரிக்கும், அவரது மகன் அபய் சிங்கிற்கும் எனது மனமார்ந்த நன்றி. வி.பி.சிங்கின் குடும்பத்தினர் என உங்களை நான் அழைக்க விரும்பவில்லை. நீங்கள் வி.பி. சிங் குடும்பத்தினர் என்றால் நாங்கள் யார். நாங்களும் விபி சிங் குடும்பத்தினர்தான். விபி சிங்கிற்கு சிலை வைப்பதன் மூலம் அவரது புகழ் உயர்வதாக மட்டும் பொருள் அல்ல. நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டியுள்ளோம்” என்றார்.