முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

“பொருட்சேதமும், உயிரிழப்பும் தடுக்கப்பட்டிருக்கிறது” முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இந்த பெருமழையிலும் பொருட்சேதமும், உயிரிழப்பும் தடுக்கப்பட்டிருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் பெரும்பாலான பகுதிகளில் நீங்கிவிட்ட நிலையில் சில பகுதிகளில் 4ஆவது நாளாக நீடித்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்த முதலமைச்சர், பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாயை இடைக்கால உதவியாக உடனடியாக வழங்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு பிரதமரிடம் நேரில் வழங்கினார். இதற்கிடையே புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வர உள்ளதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அவர், “புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழகம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்தியக்குழு வரும்” என்று தெரிவித்திருந்தார்.

சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய ஒன்றியக் குழு விரைவில் வரவுள்ளது - முதல்வர் MKStalin | RajnathSingh | Chennai CycloneMichuang

முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றியத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், மீண்டு சென்னை நகரமும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறோம். தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தகைய பெருமழையிலும் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் தடுக்கப்பட்டிருக்கிறது. சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5060 கோடி ரூபாய் வழங்கிடுமாறு இந்திய பிரதமருக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்

அதனை கருத்தில் கொண்டு ரூ. 450 கோடி ரூபாய் முதற்கட்ட நிவாரண நிதியாக அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிப்பு குறித்து ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவையும் ஒன்றிய அமைச்சருக்கு அளித்திருக்கிறேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கும் ஒன்றிய அரசின் குழு தமிழ்நாடு அரசிற்கு வர இருக்கிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நிதியதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கிடும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார். நிவாரணப்பணிகளை விரைவில் மேற்கொண்டு அனைத்து பகுதிகளையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.