முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும் நிலையில் அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வரின் இந்த பயணத்தின் போது அவரது பொறுப்புகள் வேறு மூத்த அமைச்சர்களிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வெளிநாட்டு பயணத்தின்போது முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டுப் பயணம் குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொழில், எரிசக்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை அங்கு முதலமைச்சர் சந்திக்க இருப்பதால் அத்துறைகளின் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்சி.சம்பத், காமராஜ் மற்றும் தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
முக்கியமான முடிவுகளை முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையெழுத்திட்டு ஃபேக்ஸ் (FAX) மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார் என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு 1968ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணா அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அவரது இலாகாக்களின் பொறுப்பு 4 அமைச்சர்களிடம் அளிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு கருணாநிதி ஐரோப்பாவிற்கு சென்ற போது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.
1978ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற போது, பெரும்பாலான பொறுப்புகளை அமைச்சர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். மேலும், ஒரு கட்டத்தில், தான் இல்லாதபோது நெடுஞ்செழியனே முதலமைச்சர் போல அனைத்து பொறுப்புகளையும் மேற்கொள்வார் என அன்றைய ஆளுநர் எஸ்.எல்.குரானாவிடம் கூறினார்.