சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழாவில் இன்று உரையாற்றிய முதலமைச்சர், “விடியல் தரப்போகிறோம் என சொல்லி ஆட்சிக்கு வந்தோம். அதற்கு அடையாளமாக தொடங்கப்பட்டது ‘மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி’ திட்டம்.
இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார விடியலை கொடுத்துள்ளது. அதன் அடையாளமாக இந்த திட்டத்துக்கு "விடியல் திட்டம்" என பெயர் சூட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 314 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். அந்த அடிப்படையில்தான் நமது ஆட்சியும் அமைந்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், ஒரு துறை மட்டும் வளர்ச்சி என்றில்லாமல் பல்துறை வளர்சியாக அமைந்திருக்கும்.
காலம் காலமாக குடும்ப பாரத்தை சுமக்கின்ற பெண்கள், தங்கள் உழைப்பிற்கு எந்த மதிப்புமின்றி ‘இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது’ என்று எண்ணியிருந்தனர். அவர்களின் இந்நிலையை மாற்றிடும் வகையில், ‘ஆணுக்கு இணையாக பெண்களுக்கு உரிமை உண்டு’ என்பதை அவர்களே உணர்ந்துக்கொள்ளும் வகையில் மகத்தான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன்படி ஏறத்தாழ ஒருகோடி மகளிர் மாதந்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் அடுத்த மாதம் 15ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்பட உள்ளது” என்று கூறினார்.
மேலும் முதல்வர் அறிவித்த பல திட்டங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள காணொளியைப் பார்க்கவும்.