m.k.stalin pt web
தமிழ்நாடு

“பண்டிகைக்கால தேவைகள்... விரைவில் பணத்தை விடுவியுங்கள்” மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய 2,697 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

PT WEB

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயம் நலிவடைந்த பருவங்களில் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் சிறந்த வாழ்வாதாரமாக திகழ்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டம் மூலம் 66.26 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் கிராமப்புற வேலைதிட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னும் பல வாரங்களுக்கான ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், பண்டிகைக்கால தேவைகளை கருத்தில் கொண்டு விரைவில் பணம் அளித்து உதவுமாறு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கடந்த 20ஆம் தேதி நிலவரப்படி 2,697 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் இதை விரைந்து வழங்க வசதியாக உரிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் திறன்சாரா தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.