ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 பேரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் ஈரான் கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும் ஒருமாதமாக படகிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தாங்கள் கொண்டு சென்ற அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிட்டனர். அதனால், அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் இன்னல் படுகின்றனர். அதேபோல், அவர்களின் விசாவும் காலாவதியாகிவிட்டது.
மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அந்த மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரானில் உள்ள கிஷ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.