தமிழ்நாடு

தமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள் 

தமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள் 

webteam

நீண்டநெடிய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் சீனாவில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் பல இசைக்கருவிகள் அந்நாட்டவரிடம் வரவேற்பைப் பெற்றவையாகும். இ‌க்கருவிகளில் சில இந்தியாவில் உள்ள வாத்தியக் கருவிகளைப் போன்றே இருப்பது வியப்பை அளிக்கின்றது. 

மக்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலைகளில் இசைக்கு தனி இடம் உண்டு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள சீனாவில் பண்டைக்காலம் தொட்டே சில இசைக்கருவிகள் அம்மக்களிடம் வரவேற்பைப் பெற்றவையாக உள்ளன. உலகின் பிற பகுதிகளைப் போலவே சீன இசைக்கருவிகளும் அவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களின் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தந்தி இசைக்கருவிகள், மூங்கில் இசைக்கருவிகள், தோல் இசைக்கருவிகள் என அவை எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

முக்கியமான நிகழ்வுகளின் போதும், கொண்டாட்டங்களின் போதும் இசைக்கப்படும் கருவிகளில் முக்கியமானது எர்ஹூ. இது இந்தியாவின் முக்கிய தந்தி வாத்தியங்களில் ஒன்றான சாரங்கியைப் போன்றதாகும். ஆனால் எர்ஹூ இரு தந்திகளை மட்டுமே கொண்டது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இசைக்கருவி.  

நாம் அன்றாடம் கேட்டுப் பழகிய புல்லாங்குழல் போன்ற அமைப்பை உடைய வாத்தியம் டிஸி. சீனாவிலுள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் புகழ்ப் பெற்ற வாத்தியம் இது. காரணம், இவ்வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிது. மூங்கில் குழாயில் கைவசமாக ஆறு ஓட்டைகள், காற்றை உள் செலுத்த ஒரு ஓட்டை, நடுவில் ஒரு ஓட்டை என புல்லாங்குழலில் இருந்து சற்றே வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது டிஸி.

தென்னிந்தியத் திரைப்படங்களில் சோகக் காட்சிகளை அடையாளப்படுத்த பின்னணியில் ஒலிக்கும் முக்கிய வாத்தியமாக இருந்தது ஷெனாய். அதைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட சீன வாத்தியம் லபா என அழைக்கப்படும் சுவோனா. இந்தியாவின் வடக்குப் பகுதியில் முக்கிய மங்கல நிகழ்வுகளில் ஷெனாய் இசைக்கப்படுவது போலவே சீனாவின் வடக்குப் பகுதியின் பாரம்பரிய இசை வாத்தியம் இது. 

சீனாவின் யுன்னான் மாகாணப் பகுதியில் மிகவும் புகழ்ப் பெற்ற வாத்தியம் ஹூலுசி. தாய் மற்றும் ஸீ இன மக்கள் அதிகம் விரும்பும் இந்த வாத்தியம் மூன்று மூங்கில் குச்சிகளால் உருவாக்கப்பட்டது. காற்று வாத்தியங்களில் முக்கியமான இது கிளாரினெட்டைப் போன்ற ஒலியைத் தரக்கூடியது. மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த உகந்த வாத்தியமாக இது கருதப்படுகிறது. 

சீன இசைக்கருவிகளின் தந்தை என்ற பெருமையைப் பெற்றது GUQIN- ஏழு தந்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வாத்தியமானது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது. இந்தியாவின் சித்ர வீணை வகையைப் போன்று தோற்றமளிக்கும் இந்த வாத்தியம் மிகக் குறைந்த மக்களால் மட்டுமே இசைக்கப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் இதனை அதிகம் கற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.