தலைநகர் டெல்லிக்கு சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பற்றியும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும் எனக் கூறினார். தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிடவும் உத்தரவிட்டார். போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அனைவரும் செயல்பட்ட அதே வேகத்தோடும், ஒருங்கிணைப்போடும் செயல்பட்டு இந்த பேரிடரை வென்றிட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நெல்லை மாவட்ட முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பாதிப்பு விவரங்கள் பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.