தமிழ்நாடு

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு: முதல்வர்

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு: முதல்வர்

நிவேதா ஜெகராஜா

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து விளக்கினார். மேலும் பேரவையில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்திருந்தார்.

தனது உரையில் முதல்வர் கூறியவற்றின் விவரங்கள்: “பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. ஆளுநரின் பாராட்டு உரையென்பது, மக்களுக்கான பாராட்டு உரை என்பதை தெரிவிக்க கடமைப்படுகிறேன். ஆளுநரின் உரையென்பது, அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை. அரசின் திட்டங்களை பாராட்டியதற்கு, ஆளுநருக்கும் நன்றி.

அதிக காலம் சிறையிலுள்ள சிறைக்கைதிகளை விடுவிக்க, சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் பேரவையில் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல, அறிஞர் அண்ணா பிறந்தநாளில் பலர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்துக்கொள்கிறேன். அதன்படி 10, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோர், இணைநோய் உள்ள - நோய் பாதிப்பிருக்கும் சிறைவாசிகள், பயன் பெற இயலாத ஆயுள் தண்டனை, வயது முதிர்ந்த சிறைவாசிகள், மனநல சிறைவாசிகள் ஆகியோரை கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணி தமிழகத்தில் துரிதப்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆட்சிக்காலத்தில் மொத்தமாக பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.62 லட்ச ஹெக்டருக்கும் அதிகமான நிலத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இது தரப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டொரு நாளில் வரவு வைக்கப்படும். மத்திய அரசு நிதி தரவில்லை எனும்போதும், இது மாநில நிதியிலிருந்து மக்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

இவையன்றி போக்சோ வழக்குகளை விசாரிக்க திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் போக்சோ தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 29 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்கு ஒன்றில் 82 நாட்களில் விசாரணை முடிந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.