சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் திடீரென்று முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என புகழாரம் சூட்டினார். கிராமங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி அமையும் என குறிப்பிட்ட அவர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கான பராமரிப்பு செலவுத் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் 3ஜி இணைய சேவையும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது கிராம உதவியாளர்கள் திடீரென முழக்கம் எழுப்பினர். தங்களது சங்கத்துக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஆகியவை அறிவிப்புகளில் இடம் பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.