ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

”அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்”- சந்திப்புக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.

PT WEB

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல மாதங்களாக நிலுவையில் உள்ள பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட ஆளுநரிடம் முதலமைச்சர்கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ள மசோதாக்களை திரும்பப் பெற்று அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளிக்கவும் முதலமைச்சர் கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும். அப்போது தான் மாநில மக்களின் நலனுக்கும் நிர்வாகத்திற்கும் பயனளிக்ககூடிய வகையில் செயல்பாடு அமையும்.

உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை ஆளுநர் மனதில்கொண்டு நிலுவையில் உள்ள மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்குவதோடு வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திப்பின் போது கடிதம் ஒன்றையும் முதலமைச்சர் ஆளுநரிடம் வழங்கியுள்ளார். அதில், “ அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் எனக்கு மிக உயர்ந்த மதிப்பு மரியாதை இருக்கிறது.” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதலமைச்சருடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாகவும், மாநில அரசுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”மாநிலம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தமிழக மக்களுக்காக எனது முழு அர்ப்பணிப்பை இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளேன்.மேலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மாநில அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும்” என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.