தமிழ்நாடு

"கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்"- சென்னை மாநகராட்சி ஆணையர்

"கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்"- சென்னை மாநகராட்சி ஆணையர்

jagadeesh

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மறு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதற்காக, நேரு உள்விளையாட்டரங்கத்தில் கொரோனா தடுப்பூசி பிரத்யேக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இரண்டாயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடையாள அட்டையை காண்பித்து 60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் மருத்துவ சான்றிதழை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 சுகாதாரப் பணியாளர்கள் இந்த தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் இதுவரை நான்கரை லட்சம் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.