தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சேவையை நிறுத்திய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மெட்ரோ ரயில் சேவையை நிறுத்திய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

Rasus

மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ‌ரயில் நிலையத்தின் நிரந்தரப் பணியாளர்கள் 8 பேர் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, மெட்ரோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் மெட்ரோ சேவை பாதிப்பிற்குள்ளானது. எனவே ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இதனிடையே நேற்று சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரல்- விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ஊழியர்களான மனோகரன், பிரேம் குமார், சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறான கட்டளையைக் கொடுத்து சிக்னல் கோளாறு ஏற்படுத்தி மெட்ரோ சேவையை பாதிப்படையச் செய்ததாக 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இன்னும் சற்று நேரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.