தமிழ்நாடு

சரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்

சரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்

webteam

கொலை வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் நுழைந்து கைது செய்த கோவை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், சிங்காநல்லூரில் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் சந்தோஷ். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த இவரை, சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர்கள் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து கைது செய்தனர். இதுதொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.

இந்நிலையில் இன்று காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, “சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்ய கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா? இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு முரணானது. காவல்துறையினரால் திருப்பூர் நீதிமன்றத்தில் 15 நிமிடங்கள் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அப்போது பேசிய அரசு பிளீடர், இதுகுறித்து விசாரித்து தகவல் அளிப்பதாக தெரிவித்தார்.