தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன - சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கின்றன என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சூரிய பிரகாசம் மற்றும் வினோத் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரப் படங்களில் நடிக்கும் விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆர் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 

இந்த விளையாட்டுகள் குறித்து விளம்பரப் படங்களில் நடிக்கும் விராட் கோலி மற்றும் தமன்னாவை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விராட் கோலி, தமன்னா ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. விளையாட்டுகளை ஆன்லைனில் நடத்தும் நிறுவனங்களை மட்டுமே எதிர் மனுதாரராக சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளது. 

மேலும், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் நலம் மன நலத்தையும் சீரழிக்கின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.