நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். அந்த சமயத்தில் அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும் இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிமன்றம் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.