சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வேண்டாமென மக்களில் பெரும்பாலோர் முடிவெடுத்தால் அது தேர்தல் முடிவில்
எதிரொலிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் இருந்து அகற்ற உத்தரவிடுமாறு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் மீதான விசாரணையில், சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
சபாநாயகரின் செயல்பாடு தனிமனித உரிமையைப் பாதிக்கும் என்றால் நீதிமன்றம் தலையிடும் என்ற அவர், அதனாலேயே 18 எம்எல்ஏக்களின் தகுதிநீக்க வழக்கை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதாவின் படம் குறித்து அடுத்து வரும் சபாநாயகர் முடிவு செய்வார் என்றும் நீதிபதி கூறினார். மேலும் ஜெயலலிதா படத்தை வேண்டாமென மக்களில் பெரும்பாலோர் முடிவெடுத்தால் அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.