தமிழ்நாடு

சீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Rasus

சீமைக்கருவை மரங்களை வெட்ட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை ‌அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக இருவாரங்களுக்கு ஓருமுறை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவருகிறது ‌ இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமை கருவை மரங்களால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அவர், உரிய வழிமுறைகளை ஏற்படுத்தாமல் அவற்றை அகற்றுவது சரியாக இருக்காது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். சீமை கருவேல மரங்களை வெட்டுவதை காடு அழிப்பு நடவடிக்கையாக கருதவேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை வெட்ட வரும் மே 11-ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்தும், வழக்கில், ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மே 11-ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.‌