இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்கு போராடும் பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, முன்னுரிமையில் சிறுநீரகம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே இருக்கும் கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம்-கம்சலா தம்பதியரின் மகள் லாவண்யா. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பிஏ தமிழ் முதலாமாண்டு படித்து வரும் லாவண்யாவுக்கு திடீர் உடல் நிலைக்குறைவு ஏற்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லாவண்யாவிற்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக கூறினர்.
மாணவியைக் காப்பாற்ற தந்தை சண்முகத்தின் சிறுநீரகத்தை லாவண்யாவிற்கு பொருத்தியுள்ளனர். ஆனால் பொருத்திய 7 நாளில் அந்த சிறுநீரகமும் செயலிழந்தது லாவண்யாவின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. லாவண்யாவிற்கு மீண்டும் சிறுநீரகம் கிடைக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படும் நிலையில், அதுவரை டாயாலிசிஸ் சிகிச்சை செய்ய வசதியில்லை என்கின்றனர் குடும்பத்தினர். 18 வயதே ஆன லாவண்யாவின் எதிர்காலம் கருதி தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்து உடனே சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று லாவண்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.