சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளின் முடிவடைந்த நிலையில் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக சென்னை விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருடத்திற்கு 3.5 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் சர்வதேச தரத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 2 மற்றும் 3 ஆகியவை இடிக்கப்பட்டு புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருங்கால விமான போக்குவரத்து நெரிசல், மக்கள் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு சாதகமான நிலை ஆகியவற்றின் அடிப்படையில் விமான நிலையத்தில் கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் முழுமையான திட்டம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை, இருந்தும் பிரதமர் சென்னை விமான நிலையத்திற்கு மட்டும் வந்து விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அப்படியே கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பிரதமரின் வருகையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள T2 முனையத்தின் கூரை பகுதி பரதநாட்டிய கலைஞரின் வெவ்வேறு நடன அமைப்புகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் குறைந்த அளவு வெளிச்சம் மற்றும் மின் தேவை பயன்படுத்தும் வகையிலான கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உட்புறத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் தமிழ் இசை நாட்டியம் நாடகம் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்த விளக்க படங்களும் புதிய விமான நிலையத்தில் வைக்கப்பட உள்ளன.
முன்னதாக, திறப்பு விழா காணப்போகும்,புதிய விமான நிலையத்தின் தரைத்தளத்தில் ரங்கோலி கோலம் போன்ற வடிவமைப்புகள் தரையில் பெயிண்ட் மூலம் வரையப்பட்டு வருகின்றன.