தமிழ்நாடு

சென்னை: சாலை பராமரிப்பு கூலித் தொழிலாளிகள் மீது லாரி மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

சென்னை: சாலை பராமரிப்பு கூலித் தொழிலாளிகள் மீது லாரி மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

kaleelrahman

பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளிகள் மீது லாரிமோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த லாரி ஓட்டுநரை, போலீசார் முன்பே பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையின் நடுவே உள்ள இடத்தில் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஐ.சி.எம்.ஆர் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இன்று காலை மினி லோடு வேனில் செடிகளை ஏற்றிக் கொண்டு பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் நெடுஞ்சாலையின் ஓரமாக லோடு வேனை நிறுத்திவிட்டு 4 பேர் செடி நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது பூவிருந்தவல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த லாரி பணியில் இருந்த தொழிலாளிகள் மற்றும் லோடு வேன் மீது மோதியது. இதில் லோடு வேன் தூக்கி வீசப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்ததது. பணியில் இருந்த பச்சையம்மாள், செஞ்சுலட்சுமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படுகாயமடைந்த சுகந்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


விபத்து காரணமாக வண்டலூர் மீஞ்சூர் 400 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினர் முன்பே அடித்து உதைத்தனர். கோரவிபத்தில் மூவர் உயிர் இழந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.