தமிழ்நாடு

மதுரவாயல் பாலத்தின் அடியில் சிக்கிய கனரக வாகனம்: தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மதுரவாயல் பாலத்தின் அடியில் சிக்கிய கனரக வாகனம்: தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

kaleelrahman

அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரை ஏற்றிவந்த கனரக வாகனம் மதுரவாயல் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டதோடு லேசாக தீப்பிடித்தும் எரியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மதுரவாயல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரை ஏற்றிச் சென்ற கனரக லாரி மதுரவாயல் பாலத்தின் வழியாக சென்றபோது பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து காலை எட்டுமணி முதல் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கும் வாகனத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலத்தின் அடியில் சிக்கியிருக்கும் இந்த வாகனத்தை மீட்பது ஒரு சவாலான பணி என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அதிகரிகள் கூறும் போது, “14 அடி உயரமுள்ள வாகனம் மட்டுமே இந்த பாலத்தின் அடியில் கடந்து செல்ல முடியும் ஆனால் 19 அடி உயரமுள்ள இந்த கனரக வாகனம் சென்றதால்; பாலத்தின் அடியில் சிக்கியுள்ளது. பாலத்தின் அடியில் சிக்கியுள்ள வாகனத்தில் உள்ள ஜெனரேட்டரை வெல்டிங் மூலம் வெட்டியெடுத்து மீட்கும் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கனரக வாகனம் இந்த பகுதியை கடப்பதற்கான தகவல் எதையும் தெரிவிக்காமல் வந்திருக்கிறது” என்றனர். 


நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தயாளன் பேசும்போது, “இதுபோன்ற கனரக வாகனங்கள் புறப்படும் இடம் முதல் சென்று சேரும் இடம் வரையிலான அனுமதியை நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பெற வேண்டும். அதன்படி இவர்கள் வாகனம் செல்ல அனுமதிபெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால் இந்த இடத்தை கடப்பதற்கு உள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. 

 அதேபோல வாகனம் 6 மீட்டர் உயரம்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த வண்டி அதை விட அதிக உயரமாக இருக்கிறது. அதனால் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதனால் பாலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். பாலத்திற்கும் வாகனத்திற்கும் இடையே 10 செ.மீ தான் வித்தியாசம் இருக்கிறது. அதை வெல்டிங் மூலம் வெட்டியெடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மீட்பு பணி நிறைவு பெறும்” என்றார்.