சிதம்பரம் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்குமாறு கோயில் நிர்வாக செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் கோயிலில் விசாரணைக்குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விசாரணைக்குழு ஆய்வு நடத்துவது இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின்படி தான் நடைபெறுகிறது என்றும் ஆய்வை முடிக்க குழுவுடன் ஒத்துழைக்குமாறு கோவில் நிர்வாக செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், உரிமைகளை மீறுவதாகவோ அல்லது பொது தீட்சிதர்களை கோயில் நிர்வாகத்திலிருந்து தடுக்கவோ எந்த முயற்சியும் நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரானா தொற்று காரணமாக கனகசபையில் பக்தர்களை அனுமதிக்காத நிலையில் தொற்று குறைந்ததும், மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி தான் நடத்தப்படுகிறது என ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 7 முதல் 8ஆம் தேதி வரை விசாரணைக் குழு நேரடியாக ஆய்வு செய்யவுள்ளது என்று இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் மீண்டும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்து வரும் சூழ்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.