தமிழக அரசு கோரியிருந்த சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி, சென்னைக்குள் 16 கி.மீ. ஓடுகிறது கூவம் ஆறு. கூவம் ஆற்றின் தொடக்கப் பகுதியை இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆற்றின் பகுதி, கண்ணால் பார்க்கக்கூட சகிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. கூவம் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலைதான் உள்ளது. சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை என்ற அரசு அமைப்பின் மூலம் கூவத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது.
ஒன்று முதல் 3 ஆண்டுகளை வரை குறுகிய கால திட்டம், 4 முதல் 8 ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், 8 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால திட்டத்தில் ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையோரங்களை அழகுபடுத்து வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களில் ஆற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடலை ஒட்டிய முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டமாக பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தூர்வாருவது, கரையோரத்தில் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.