கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவை தொகுதிக்கான தேர்தல் செல்லாது என்றும், அதன்மூலம் அதிமுக வேட்பாளர் ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.
இந்த நேரத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் என்னென்ன, அதிலென்ன தீர்ப்புகள் வழங்கப்பட்டன, எந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி இங்கு விரிவாக காணலாம்.
* 2021-ல் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகந்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில், தபால் வாக்குகளை எண்ண வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* 2021-ல் சென்னை சேப்பாக்கம் தொகுதியில், திமுக வேட்பாளர் உதயநிதி பெற்ற வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உதயநிதி தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
* 2021-ல் தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பெற்ற வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில், ஒ.பி.எஸ். தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றி செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* 2019-ல் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நிராகரிக்க மறுத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
* 2017-ல் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் அதிமுக (அம்மா) அணி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தினகரன் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்று தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
* 2016-ல் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் பெற்ற வெற்றியை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் வேட்பாளருமான தொல் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.க.செல்வத்தின் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் ஆர்.செல்வம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் சென்னை ஆவடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை எதிர்த்து வாக்காளரான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், போஸ் மரணமடைந்தார். இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டதில் தவறு உள்ளது என கூறி போஸ் வெற்றி பெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தேர்தல் வழக்கு தொடரப்படாததால், இரண்டாம் இடத்தில் இருந்த சரவணனை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
* 2016-ல் செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் வரலட்சுமி வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் கமலகண்ணன் தாக்கல் செய்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* 2016-ல் சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜா பெற்ற வெற்றியை எதிர்த்த திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* 2016-ல் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2016-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெ.ஜெயலலிதாவின் வெற்றியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் பிரவீனா தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜெயலலிதா மரணமடைந்ததால் தேர்தல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது
* 2016-ல் திண்டிவனம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. சீத்தாபதியின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2009-ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
- முகேஷ்