தமிழ்நாடு

மேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு

மேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு

webteam

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்‌ணீர் திறந்துவிடக்கோரி மேலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய ஆயிரத்து 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முல்லை பெரியாறில் இருந்து ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேலூரில் சென்னை - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலையை மறித்து 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைகை அணையில் இருந்து ஒரு வாரத்திற்கு 900 கன அடி நீர் திறந்து விட உத்தரவிட்டார். 

இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பெரியாறு - வைகை ஒருபோக பாசன சங்கத்தலைவர் முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 200 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.