தமிழ்நாடு

நெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு

நெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு

Rasus

நெல்லையில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சித்ரவதை செய்த புகாரில் 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். அங்குள்ள மாடத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக கடையை சுற்றியுள்ள சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அவசர தேவை என்பதால் அதிக வட்டிக்கே அவர் பணம் வாங்கியதாக தெரிகிறது.

இதனிடையே பணம் கொடுத்தவர்கள் கனகராஜிடம் அசலை திரும்பக் கேட்டு வந்துள்ளனர். ஆனால் வட்டியே அதிகம் இருந்ததால், கனகராஜினால் மாதந்தோறும் வட்டியை மட்டுமே செலுத்த முடிந்துள்ளது. அசலை திருப்பித் தராத காரணத்தினால் கனகராஜ் மற்றும் அவரது மனைவியை கடன் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கனகராஜ் நெல்லை டவுன் போலீசில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதன்பேரில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சித்ரவதை செய்த புகாரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கடந்த 2017-ஆம் ஆண்டு கந்துவட்டி பிரச்னை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கந்துவட்டி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டது. இந்நிலையில் நெல்லையில் மீண்டும் கந்துவட்டி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிகிறது.