பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் மருமகன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதும் இல்லாமல் தன் மீதும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாயலத்தில் அறிவித்தார். பின்னர் பேசிய அவர், “பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் குற்றாளிகளை தப்பிவிடாமல் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம். கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
இந்தக் தோழமை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தாலும், தற்போது இது மக்களவைத் தேர்தலுக்காக ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்துள்ளோம். எனவே இது பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வேட்பாளர்களை பொறுத்தவரையில் அந்தந்த கட்சியினர் அறிவிப்பார்கள். திமுக தனியாக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை முறையாக தயாராகியுள்ளது. அது இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியாகும். மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்போது, இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிடும்.
பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்பதால், அது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. அதற்காக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்பவே என் மருமகன் சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்மீது மட்டுமல்ல இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறேன் என என்மீதும் புகார் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக நான் சட்டரீதியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தை நாங்கள் நாடப்போகிறோம். தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தினால், தற்போது இருக்கும் ஆட்சி இருக்காது” என்றார்.
இந்த நிகழ்வின் போது, திமுகப் பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.