அத்திவரதர் வைபவத்திற்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு கோரியும், வரதராஜ பெருமாள் கோயிலை திறக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தீசிஸ் சீனிவாசன் என்பவர் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “லட்சகணக்கான மக்கள் தினமும் கூடும் விழாவிற்கு முறையான பாதுகாப்பு இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறுகிறது. கூட்ட நெரிசலையும், பொதுமக்கள் பாதுக்காப்பையும் கருத்தில்கொண்டு துணை ராணுவ படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், அத்திவரதர் வைபவத்திற்காக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மூல ஸ்தானத்திற்கு சென்று வழிப்பட முடியாமல் மூடி வைத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் முறையீடு செய்து வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரி ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் இணைத்து நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.