எம்பி ஞான திரவியம் Twitter
தமிழ்நாடு

நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் மோதல் விவகாரம் - திமுக எம்பி ஞான திரவியம் மீது வழக்குப்பதிவு

நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் அலுவலக வளாகத்தில் பிஷப்பின் ஆதரவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக எம்பி ஞான திரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 33 பேர் மீது 147, 294 b, 323, 109, 506( 1) என 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

திருநெல்வேலி டயோசீசன் நிர்வாகத்தில், பிஷப் பர்னபாஸ் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் ஆதரவாளரான திமுக எம்.பி ஞான திரவியம் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. டயோசீசன் நிர்வாகத்தில் தனிச்சையாக செயல்படும் எம்.பி. ஞான திரவியம் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ஜான்ஸ் பள்ளி தாளாளர் பதவியில் இருந்தும், திருமண்டல கல்வி குழு நிலவர செயலர் பதவியில் இருந்தும் பிஷ்ப் பர்னபாஸ் அவரை நீக்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜான்ஸ் பள்ளி வளாகத்திலும், டயோசீசன் அலுவலகத்திலும் இரு தரப்பினரிடையே குழுக்களாக மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக தலைமை, எம்.பி.ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மத போதகர் காட்பிரே நோபிள் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனை அடுத்து நேற்று டயோசீசன் அலுவலக வளாகத்தில் மத போதகர் காட்பிரே நோபிளை அடித்து சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தாக்குதலுக்கு உள்ளான மத போதகர் காட்பிரே நோபிள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பாளையங்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள், திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது 147 - சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்தல், 294 b - பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் செயல்படுதல், 323 - தன்னிச்சையாக காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவது, 109 - குற்றம் செய்ய தூண்டி விடுதல், 506 (1) - மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுவது என 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக டயோசீசன் அலுவலகத்தில் நிர்வாக ரீதியிலான மோதல் போக்கு தொடர்ந்து பரபரப்பாகி வரும் நிலையில் தற்போது திமுக எம்.பி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.