மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து தமிழக அரசு தன்னுடைய முடிவை இன்று அல்லது நாளை காலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மார்ச் 31 ஆம் தேதி வரை இயங்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.