சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேருந்து நிலையத்தில் பெண் பயணி ஒருவரை அரசு பேருந்து நடத்துனர் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இளையான்குடி அருகேவுள்ள ராஜபுளியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி. இவர் தனது குழந்தையுடன் இளையான்குடிக்கு சாத்தரசன்கோட்டையிலிருந்து அரசு பேருந்து ஒன்றில் ஏறி சென்றுள்ளார். அப்போது பயணச்சீட்டு பெறாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீராத்தங்குடி விளக்கு அருகே பயணச்சீட்டு பரிசோதகர் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது பயணச்சீட்டு இல்லாததால் லெட்சுமியிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அதற்கு தான் உறங்கிவிட்டதாகவும் அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்றும் லெட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும் பரிசோதகர் விதித்த அபராத தொகையை இளையான்குடி வந்து சேர்ந்தவுடன் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடத்துடனர் லெட்சுமியின் கைப்பையை எடுத்து வைத்துக்கொண்டு மாலை வரை காக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடத்துனருக்கும், லெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுளளது. வாக்குவாதம் முற்றவே லெட்சுமியை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார் நடத்துனர். இந்தக்காட்சியை அங்கு கூடி நின்றவர்கள் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து இளையான்குடி பேருந்து நிலையத்தில் அந்த பெண் லெட்சுமியின் கைப்பையை எடுத்துகொண்டு இறக்கிவிட்டு சென்ற நடத்துனர்.அதன்பின் சிவகங்கை சென்று திரும்பியதாக கூறப்படுகிறது. அதுவரை இளையான்குடி பேருந்து நிலையத்திலேயே காத்திருந்த லெட்சுமி மீண்டும் மாலை 5 மணிக்கு திரும்பி வந்த அந்த பேருந்து ஓட்டுனர் பூமிநாதனிடம் கைப்பையை எடுத்துசென்றது குறித்து கோபமாக கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாக்குதலுக்குள்ளான லெட்சுமி இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து இருவருமே இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.