தமிழ்நாடு

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் உறுதி

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் உறுதி

ஜா. ஜாக்சன் சிங்

பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்து பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வரும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளைத் தடுக்கவும், சாலைகளைப் பாதுகாப்பாக மாற்றவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையானது "தோழன்" என்ற அமைப்புடன் இணைந்து 100 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்த மெகா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்ன்ர செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் 100 பள்ளிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. பேருந்து படிகட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து போலீஸார் எச்சரிக்கை செய்து வ ருகிறார்கள். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து எச்சரிக்கை விடுக்கிறோம். முறையாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளோம். அதனையும் மீறி மீண்டும் மீண்டும் அதே மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கண்டிப்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.

பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் யார் யார் என்பதைகண்டறிந்து எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். தொடர்ந்து பேருந்து படிக்கட்டில் பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.