தமிழ்நாடு

தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்.. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்கும் அரிய பொருட்கள்

தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்.. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்கும் அரிய பொருட்கள்

webteam

சிவகங்கை மாவட்‌டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள் மற்றும், மண் ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் கடந்த 19-ஆம் தேதி முதல் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் மட்டுமே நடைபெற்ற நிலையில் 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியை அறியும் வகையில் கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட 4 இடங்களில் சேர்த்து 122 ஏக்கர் பரப்பில் விரிவான அகழ்வாராய்ச்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொந்தகை ஈமக்காடு பகுதியில் நடத்திய ஆய்வில், இரண்டு முதுமக்கள் தாழிகளும், ஏராளமான மண் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படவில்லை. அதேபோல, கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வில், ஏராளமான பாசி மணிகளும், மண்பாண்ட ஓ‌டுகளும், எலும்புத்துண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வில் கிடைக்கும் மனித எலும்புகளின் மாதிரியை டி.என்.ஏ பரிசோதனை செய்து இன மரபியலை அறிந்து அவர்களின் வாழ்வியல் முறை குறித்து அறிய முடியும் எனவும் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்தார். பண்டை தமிழர்களின் வாழ்வியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் விதமாக இந்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன