எம்.ஜி. ஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல்முறையாக பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாலூட்டும் அறை திறக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்பட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எம்.ஜி. ஆர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்று வர இன்று திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை இனி வரும் காலங்களில் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி திறந்து வைத்தார்.