வனவிலங்குகளுக்கு சமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் கரியமங்கலம் வனப்பகுதி அருகே மான் மற்றும் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வைத்துள்ளனர். ஊரை ஒட்டியுள்ள வனப்பகுதி என்பதால் அங்கு சிறுவர்கள் விளையாடச் செல்வது வழக்கம். அப்படி விளையாடச் சென்ற எட்டு வயதான தீபக் என்ற சிறுவன் பழம் ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்து அதை கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளான். அப்போது அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும் சிறுவனுக்கு மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள செங்கம் காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்..