தமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Sinekadhara

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். பாஜக நிர்வாகியான கல்யாணராமன், யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டவர்களின் கைது விவகாரம் குறித்து ஆளுநரிடம் பேசியதாக பாஜக தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனின் அளுநரை இன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து பேட்டியளித்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், மாரிதாஸ் உள்ளிட்டவர்களை மட்டும் கைதுசெய்யும் அரசு, அதேபோன்ற கருத்துகளை பதிவிட்ட பிறரை ஏன் கைது செய்யவில்லை? முப்படைகளின் தலைமை தளபதி விபத்தில் இறந்ததை கொண்டாடும் விதமாக பதிவிட்ட 300 பேரின் கருத்துகள் அடங்கிய நகலை ஆளுநரிடம் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், தேச தலைவர்களை, தேசத்தை தவறாக பதிவிடும் பதிவுகளை பாஜக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்த அவர், இந்திய தேசத்தை குறைகூறி பதிவிடுவோருக்கு திமுக தலைவர்கள் ஆதரவாக பதிவுகளை இடுவதாக குற்றஞ்சாட்டினார். பாஜகவின் 21 நிர்வாகிகள் மீது திமுக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டு பாஜகவினரை திமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது எனவும், பாஜக அளித்த ஆதரங்களின் அடிப்படையில் டிஜிபிக்கு உத்தரவிட ஆளுநரை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.